நாளை வருகிறது ராமநவமி…! ஒரு முறை ராம நாமம் உச்சரித்தால் இவ்வளவு பலன்களா?!

ராமர் என்றதுமே நம் நினைவுக்கு வருபவர் ராமாயணத்தின் நாயகன். வில் அம்பு சகிதம் கம்பீரமாக நின்று எத்தகைய இன்னல்கள் வந்தபோதும் சளைக்காமல் சமாளித்து வெற்றி நடை போட்டவர். ராஜ்ஜியத்தையே இழந்து கானகம் சென்று 14 ஆண்டுகள் ஒரு வனவாசத்தை அனுபவித்து அங்கும் கண்ணியமாக நடந்து தன் மனைவியைக் கவர்ந்து சென்ற ராவணனைக் கொன்று அவனிடமிருந்து மீட்டார் ராமர்.

வாழ்க்கையில் ஒரு மனிதன் எப்படி எப்படி எல்லாம் வாழ வேண்டும். கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதை வெகு அழகாக வாழ்ந்து காட்டியுள்ளார் ராமபிரான்.

நாளை 30.03.2023 (வியாழக்கிழமை) ராம நவமி வருகிறது. இன்றைய நாளில் தான் பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அவதரித்துள்ளார். இதையொட்டி ராமபிரானைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

Ramar2
Ramar2

ஒரு நல்ல அரசர், கணவன், சகோதரர் மற்றும் நண்பர் போன்ற அனைத்து உறவுகளுக்கும் ஓர் உதாரணமாக திகழ்ந்தவர் ஸ்ரீராமச்சந்திரர்.

ராமர், சீதையின் சுயம்வரச் சடங்கில் இவ்வுலக வீரர்களில் மத்தியில் பிரம்மாண்டமான சிவதனுசை மிக எளிதாக உடைத்தார். இதன்மூலம் பகவானின் மார்பில் எப்பொழுதும் உறையும் ஸ்ரீதேவியின் அவதாரமான சீதா தேவியை மணம் புரிந்தார்.

வனவாசம்

அயோத்தியின் மன்னராக முடிசூட இன்னும் சில கணங்களே இருந்த போதிலும், தன் தந்தையின் உத்தரவை நிறைவேற்றுவதற்காக பகவான் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தமது ராஜ்ஜியம், செல்வம், நண்பர்கள், உறவினர்கள், வசிப்பிடம் முதலான அனைத்தையும் துறந்து, லக்ஷ்மணர் மற்றும் சீதையுடன், 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார்.

வனவாசத்தின் போது சீதையை அபகரிப்பதற்காக, ராவணன் மாரீசன் எனும் அசுரனை ஒரு தங்க மானின் உருவில் அனுப்பினான். அந்த அற்புத மானைக் கண்ட ராமர், சீதையை மகிழ்விக்கும் பொருட்டு, அந்த மானைப் பிடித்து வரச்சென்றார். ராமர் இல்லாத இந்த சமயத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்றான். பிறகு பகவான் ஸ்ரீராமச்சந்திரரும், லக்ஷ்மணனும் வனம் முழுவதிலும் சீதையைத் தேடி அலைந்தனர்.

அப்போது ஓரிடத்தில் ராவணனால் இறகுகள் துண்டிக்கப்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாக இருந்த ஜடாயுவைக் கண்ட ராமர் ராவணின் கொடிய செயலை அறிந்து வேதனையுற்றார்
பிறகு சீதையை மீட்பதற்காக இந்து மகா சமுத்திரத்தின் மீது கற்களாலான ராஜவீதி ஒன்றை அமைத்தார்.

மரம் செடி கொடிகளைக் கொண்ட பெரும் மலைச் சிகரங்கள் வானர வீரர்களால் பெயர்த்தெடுக்கப்பட்டு சமுத்திரத்தில் வீசப்பட்டன. அவை பகவானின் ஆணையினால் மிதக்க ஆரம்பித்து, பிரம்மாண்டமான பாலமாக உருவாகி, இதற்கு பெயர் தான் பகவானின் சர்வசக்தி என்று நிரூபிக்கும் வண்ணம் அமைந்தது. .

பிறகு ராமர், விபீஷணர் வழிகாட்ட, சுக்ரீவன், நீளன் மற்றும் அனுமான் ஆகியோரின் தலைமையிலான வானர வீரர்களுடன் சமுத்திரத்தைக் கடந்து இலங்கையைத் தாக்கினார். லக்ஷ்மணரின் உதவியுடன் ராமரின் படை ராட்சஷர்கள் அனைவரையும் கொன்றது.

தன்னுடைய வீரர்கள் மடிந்ததைக் கண்ட ராவணன் கடும் கோபத்துடன் ராமரை கூரிய அம்புகளால் தாக்கினான். பின் ராமர் தமது வில்லில் ஓரம்பைப் பொருத்தி ராவணனை நோக்கி விட்டார். அந்த அம்பு ராவணனின் இதயத்தை துளைத்ததால், அவன் தன் 10 வாய்களிலிருந்தும் ரத்தம் கக்கிக் கொண்டு கீழே விழுந்தான்.

அதன் பிறகு இலங்கையின் பொறுப்பை வீபிஷணருக்குக் கொடுத்த ராமர், தனது வனவாச காலம் முடிவுற சீதாதேவியுடன், அனுமான், சுக்ரீவன் மற்றும் தம்பி லக்ஷ்மணன் ஆகியோரால் சூழப்பட்டவராய் அயோத்திக்குத் திரும்பினார்.

பிரம்ம தேவரைப் போன்ற மகா புருஷர்களும் மற்ற தேவர்களும் பகவானின் செயல்களை பெரு மகிழச்சியுடன் போற்றிப் புகழ்ந்தனர். பரமபுருஷரான பகவான் ஸ்ரீராமச்சந்திரரின் சரிதத்தினை பற்றிக் கேட்பவர்கள் பொறாமை என்னும் நோயிலிருந்தும், கர்ம பந்தத்திலிருந்தும் விடுபட்டு முக்தியடைவர்.

ராம மகா மந்திரம்

Ramanavami2
Ramanavami2

ராமர் அவதரித்த இந்த புண்ணிய திருநாளில் அவரது திருநாமத்தினை உச்சரிப்பது மிகவும் அவசியம்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே… ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற 16 வார்த்தைகள் அடங்கிய மகா மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தால் 16 முறை ராம நாமம் சொன்ன பலனும், 16000 முறை விஷ்ணு நாமம் சொன்ன பலனும் கிடைக்கும். அதாவது ஒரு முறை ராம என்று உச்சரித்தால் 1000 முறை விஷ்ணு நாமங்களின் பலனைத் தரும் என்று விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்திரம் கூறுகிறது. ஹரே கிருஷ்ண ஹரே ராம மகா மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பு.

ராம நவமியன்று சூரிய அஸ்தமனம் வரை விரதம் இருப்பது நல்லது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews