தமிழகத்தில் கடந்த வாரம் மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில் அந்த புயல் காரணமாக கனமழை மற்றும் பெரும் சேதம் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் புயல் கரையை கடந்து ஒரு வாரம் ஆகி விட்டபோதிலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இன்னும் ஒரு சில மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் மாவட்டத்திலுள்ள பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் அதிகமாக உள்ள பகுதிகளில் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கேரள கர்நாடக பகுதியில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் டிசம்பர் 17ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் லட்சத்தீவு, கேரளா கடற்கரை பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.