வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை ஏற்பட்டிருக்கும் நிலையில் திடீரென தற்போது மீண்டும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று வருவதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம், ஆகிய எட்டு மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இன்று காலை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. தேனாம்பேட்டை, நந்தனம், சின்னமலை, கிண்டி, ஆதம்பாக்கம், ஆலந்தூர், மடிப்பாக்கம், மெரினா கடற்கரை, தண்டையார்பேட்டை, ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு அதே பகுதியில் நீடிப்பதாகவும் இது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தால் தமிழகத்தில் இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்று மற்றும் நாளையும் பிப்ரவரி 1, 2 ஆகிய நான்கு நாட்களும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் குறிப்பாக சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.