ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ம் ஆண்டு பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமரின் குடும்ப பெயரை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியதாக குற்றச்சாட்டப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்’ என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
இதுதொடர்பாக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் அடிப்படையில் அதே ஆண்டு ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு, மேல்முறையீடு செய்ய காலஅவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
இதனையைடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் தனக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி சூரத் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
அதனை விசாரித்த நீதிமன்றம், ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.