#Breaking ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என  சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

2019ம் ஆண்டு பிரதமர் மோடியை கொச்சைப்படுத்தியதாக  ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை  விசாரித்து வந்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமரின் குடும்ப பெயரை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார். கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்’ என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதுதொடர்பாக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் அடிப்படையில் அதே ஆண்டு ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், இன்று இறுதி தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதேசமயம் ராகுல்காந்தி 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வழங்கியுள்ள சூரத் நீதிமன்றம், அதற்கு வசதியாக பிணை வழங்கியும் உத்தரவிட்டுள்ளது. ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி ஜாமின் பெற்றுக்கொள்ள ராகுல் காந்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.