#BREAKING ராகுல் காந்தி 8 ஆண்டு தேர்தலில் போட்டியிட முடியாது – பேரதிர்ச்சியில் காங்கிரஸ்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அடுத்த 8 ஆண்டுகளுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

சிறை தண்டனை காலமான 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு பிறகான 6 ஆண்டுகள் என மொத்தம் 8 ஆண்டுகளுக்குப் பிறகே ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை உருவாகியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமரின் குடும்ப பெயரை அவமதிக்கும் வகையில் கருத்து கூறியிருந்தார். கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திருடர்களும் மோடியை எப்படி பொதுவான குடும்பப்பெயராக வைத்திருக்கிறார்கள்’ என பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

இதுதொடர்பாக குஜராத் முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடி அளித்த புகாரின் அடிப்படையில் அதே ஆண்டு ராகுல் காந்தி மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் பிறப்பிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தியை வயநாடு எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதாக மக்களவை அறிவித்தது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனுடன் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் ராகுல் இழக்க நேரிடும். இந்த வளர்ச்சி காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தலும், அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், ராகுல் காந்தி சிக்கலில் சிக்கியுள்ளதாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தற்போது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.