அக்கவுண்டில் பணம் இல்லாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சித்தால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிக்கப்படும் என ஒரு சில வங்கிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மே ஒன்றாம் தேதியிலிருந்து பல வங்கிகள் தங்களது புதிய விதிமுறைகளை இணையதளங்கள் மூலம் அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி கணக்கில் பணம் இல்லாமல் ஏடிஎம்-இல் பணம் எடுக்க முயற்சித்தால் அந்த பரிவர்த்தனை தோல்வியடையும். அவ்வாறு தோல்வியடையும் பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு ரூபாய் பத்து மற்றும் அதற்கான ஜிஎஸ்டி அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எனவே ஏடிஎம்-இல் பணம் எடுப்பதற்கு முன்பாக உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரி பார்த்து அதன் பின் பணத்தை எடுக்கவும்.
உதாரணமாக உங்கள் அக்கவுண்டில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது என்றால் நீங்கள் 15 ஆயிரம் ரூபாய் ஏடிஎம்மில் எடுக்க முயன்றால் அந்த பரிவர்த்தனை தோல்வியடையும். அப்போது உங்களுக்கு ரூ.10 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி அபராதமாக விரிக்கப்படும். அபராதமாக விதிப்பதற்கான பணம் கூட உங்கள் அக்கவுண்டில் இல்லை என்றால் கூடுதலாக பிரச்சனை ஏற்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக வாடிக்கையாளர்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் முயற்சித்தால் அபராதம் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு தான் வங்கி என்ற நிலை மாறி தற்போது வாடிக்கையாளர்களின் பணத்தை அபராதங்கள் மூலம் எடுப்பதுதான் வங்கி என்ற நிலையில் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டது. எனவே வாடிக்கையாளர்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக தங்கள் வங்கி கணக்குகளை கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.