கப்பே ஜெயிக்காட்டியும் பஞ்சாப் கிங்ஸ் செஞ்ச கெத்தான விஷயம்.. சாம்பியன் கேகேஆர்னால கூட முடியலையே..

இதுவரை நடந்து முடிந்த ஐபிஎல் தொடர்களில் மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹைதராபாத், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட அணிகள் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒரு சில அணிகள் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறும் வாய்ப்பை பெறாமல் இருந்து வருகின்றனர்.

அதிலும் ஆர்சிபி அணி மூன்று முறை இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த நிலையில் ஒருமுறை கூட அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்த சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு கம்பீரமாக நுழைந்திருந்த பெங்களூரு அணி முதல் போட்டியிலேயே பரிதாபமாக தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஒரு சில முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி இருந்தாலும் ஒரே ஒரு முறை தான் இறுதி போட்டிக்கு முன்னேற, அதிலும் தோல்வியடைந்திருந்தனர். அந்த அணியும் பல சிறப்பான வீரர்களைக் கொண்டு விளங்கியபோதிலும் ஏதாவது ஒரு தவறின் காரணமாக அவர்களால் கோப்பையை வெல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி, பல விதமாக கடந்த பல சீசன்களில் அணிகளை மாற்றி பார்த்தும் அவர்களால் கோப்பையை நெருங்கவே முடியவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜார்ஜ் பைலி தலைமையில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த பஞ்சாப அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தபோதிலும் அதனை கடைசி கட்டத்தில் தவற விட்டிருந்தது.

அதிலும் மற்ற அணிகளை விட பஞ்சாப் அணிக்கு பரிதாபமாக இருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறவில்லை என்பது தான். இந்த சீசனின் ஆரம்பத்தில் ஷிகர் தவன் தலைமையிலேயே பல போட்டிகளில் தோற்று விமர்சனத்தை சந்தித்து வந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. தொடர்ந்து, சாம் குரானின் தலைமையில் சில முக்கியமான வெற்றிகளையும் பெற்றிருந்தாலும் அவை பிளே ஆப் முன்னேற போதுமானதாக இருக்கவில்லை.

பல கேப்டன்கள் மாறியும், பல வீரர்கள் மாறியும் அந்த அணியால் நல்ல நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்து வரும் அதே வேளையில், மிக அசத்தலான ஒரு சம்பவத்தையும் செய்து வருகிறது. கடந்த 17 வருட ஐபிஎல் வரலாற்றில், 2016 சீசனை தவிர, மற்ற அனைத்திலும் ஒரு சீசனில் கோப்பையை வெல்லும் அணி, அதே சீசனில் பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கும். 2016 ல் வெற்றி பெற்ற ஹைதராபாத் அணியை தவிர மற்ற அனைத்து சாம்பியன்களுமே பஞ்சாபிற்கு எதிராக அதே சீசனில் தோற்றுள்ளனர்.

இந்த சீசனில் கோப்பை வென்ற கொல்கத்தா அணியும், கடந்த சீசனில் கோப்பையை சொந்தமாக்கிய சிஎஸ்கே அணியும், 2022 ஆம் ஆண்டு வென்ற குஜராத் அணி என 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, ஒரு சீசனை தவிர அனைத்து சீசன்களிலும் சாம்பியன் அணி பஞ்சாபிற்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...