9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசி கொடுக்க தடை.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசி என்று கூறப்படும் மாற்றுச் சான்றிதழ் கொடுப்பதற்கு கல்வி நிலையங்களுக்கு தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்படும் தனியார் பள்ளிகள் பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைய கூடாது என்பதற்காக சுமாராக மற்றும் மோசமாக படிக்கும் மாணவர்களை ஏதாவது ஒரு காரணம் கூறி மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நீக்கப்படுவதாக புகார் வந்தது.

குறிப்பாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் அதிகமாக மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வெளியேற்றப்படுகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் 9, 10, 11,12 ஆகிய வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால், மாணவர்களின் பெற்றோரை மாற்றுச் சான்றிதழ் பெறச் சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவது பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

எனவே, அனைத்து தனியார் பள்ளிகளில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்க வேண்டாம். தவிர்க்க முடியாத பட்சத்தில், இடமாறுதல் சான்றிதழ் வழங்க சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews