சற்றுமுன் வெளியான செய்தி: ஈசிஆர் சாலைகள் போக்குவரத்து நிறுத்தம்!

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று இரவு அரசு போக்குவரத்து பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஈசிஆர் சாலையில் அரசு போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக் கடலில் தோன்றிய புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு பேருந்துகள் இயங்காது என தமிழக அரசின் போக்குவரத்து துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கிழக்கு கடற்கரை சாலையில் புதுவை அரசு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புயல் கரையை கடந்த பிறகுதான் பேருந்து சேவை தொடங்கும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை காரைக்கால் செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதே நேரத்தில் சென்னையில் இருந்து செல்லும் பேருந்துகள் ஈசிஆர் வழியே சென்று கொண்டிருப்பதாகவும், ஆனால் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் தற்போது காற்று மிக வேகமாக வீசி வருவதை அடுத்து பாதுகாப்பு அம்சத்தை கணக்கில் கொண்டு தமிழக அரசின் போக்குவரத்து பேருந்துகள் நிறுத்தப்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுவதால் பயணிகள் தங்கள் பயணத்தை ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருவதையடுத்து படகு சவாரி, சைக்கிள் சவாரி, பசுமை பள்ளத்தாக்கு சுற்றுலா தளங்கள் மூடப்பட்டுள்ளதாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களுக்கு இன்று அனுமதி அளிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.