பொதுமக்கள் அஞ்சவேண்டாம் – அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்!

பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தேவையற்ற சலசலப்புக்கு அஞ்ச வேண்டாம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ஆவின் நிர்வாகத்தை பொறுத்தவரை பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரே சீரான விலையை எல்லா காலங்களிலும் வழங்கி வருவதாகவும், இதை வேறு எந்த நிறுவனங்களும் கடைபிடிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து திமுக அரசு லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தி வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பால் விற்பனை பொறுத்தவரையில், மற்ற நிறுவனங்களை விட தரமானதாகவும் விலை குறைந்ததாகவும் பொது மக்களுக்கு ஆவின் வழங்கி வருவதாக குறிப்பிட்டிருக்கும் அமைச்சர், விரைவில் சீரான பால் கொள்முதல், பால் பதப்படுத்துதல், பால் பொருட்கள் தயாரித்தல், விற்பனையை முறைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார் .

ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை வழங்கும் என உறுதி அளித்திருக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ் பால் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் சலசலப்புக்கு அஞ்ச வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.