#Breaking கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் உள்ளே செல் போன் பயன்பாட்டிற்கு தடை விதித்து ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அர்ச்சகரான சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், “கோவில்களின் சிலைகளை பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களினால் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சில கோயில்களில் சிலைகள் திருட்டு போன சம்பவங்களும் நடந்துள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்தி சாமிக்கு அபிஷேகம் செய்வது மேலும் அங்குள்ள சிலைகள் முன்பு நின்று செல்பி எடுப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே மொபைல் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும்.” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்ய நாராயணா பிரசாத் அமர்வு முன்பு தூத்துக்குடி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கோவிலில் செல்போன் பயன்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், செல்போன்கள் பயன்பாட்டை கண்காணிப்பதற்காக தன் ஆர்வல மகளிர் சுய உதவி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். செல்போன்களை தற்காக பாதுகாப்பு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன போன்ற் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

கோவில் பணியாளர்கள் உட்பட கோவிலுக்குள் மொபைல் போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  கோவில் வளாகத்தில் செல்போன்கள் வைக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டு டோக்கன் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது

கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் வகையில் உடை அணிந்து வர வேண்டும் என விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கண்காணிக்க பாதுகாவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி இணை ஆணையர் ஏற்கனவே மொபைல் போன் பயன்பாட்டிற்கு தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார் இதே போல் தமிழகத்தின் அனைத்து கோவில்களிலும் உள்ளே செல்போன் பயன் பாட்டிற்க்கு தடை விதித்து நடைமுறைப்படுத்த இந்து சமய அறநிலை துறையின் ஆணையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.