CSK, GT இறுதிப்போட்டிக்கு சிக்கல்.. கோப்பை யாருக்கு?

கன மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி ரிசர்வ் முறைப்படி இன்று இரவு நடைபெற உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் குஜராத் டைட்டன் அணிகள் மோத இருந்தன.

ஆட்டம் இரவு ஏழு முப்பது மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மாலை முதலே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி நடைபெறக்கூடிய அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குவிந்தனர். தோனி விளையாடும் கடைசி ஐபிஎல் தொடர் என சொல்லப்படுவதால் சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்கள் அகமதாபாத் சென்று இருந்தனர்.

இதனால் மஞ்சள் டி-ஷர்ட் அணிந்த ரசிகர்களால் பார்வையாளர் இடங்கள் நிரம்பி இருந்தன. ஆனால் போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தொடங்கிய கனமழை விடாமல் கொட்டி தீர்த்தது.

இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மைதானத்திலும் உலகெங்கும் தொலைக்காட்சி முன்பும் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இரவு 11 மணி வரையிலும் மழை விடாததால் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ரிசர்வ் முறைப்படி ஆட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றும் மழை தொடர்ந்தால் ஐபிஎல் விதிமுறைப்படி முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.