தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாத ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில் இன்னும் அந்த பணம் வழங்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது என்பதும் இதில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது என்பதும் தெரிந்ததே. தற்போது பசவராஜ் பொம்மை முதலமைச்சராக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு மே மாதம் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளும் ஜனதா தள் மற்றும் பாரத் ராஷ்டிரா சமிதி ஆகிய கட்சிகளும் போட்டியிட உள்ளன. இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் பிரியங்கா காந்தி இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பொதுக் கூட்டத்தில் பேசிய போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிக்கு ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.