தமிழகத்தில் தமிழ்மொழியில் பயின்றவர்களுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை, புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் தான் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்ததாகவும் பின்னர் தனது ஊரில் போதிய வசதியில்லாத காரணத்தினால் கேரளாவிற்கு சென்று ஆங்கில வழியில் 11,12- ம் வகுப்புகளை முடித்ததாக கூறினர்.
இதனிடையே குரூப்-2 தேர்வெழுதி தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தற்போது சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறினார். தற்போது குரூப் -1 தேர்வு எழுதியப்போது தமிழக அரசின் புதிய சட்டதிருத்தத்தின் அடிப்படையில் தமிழ் மொழியில் பயின்றதற்கு சான்றிதழ்கள் கேட்பதாகவும் கூறினார்.
இதனால் இந்த சட்டத்திருத்தமானது அடிப்படை உரிமையை பாதிப்பதாக இருப்பதால் அரசின் புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவித்து, அந்த சட்ட திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்குமாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த சூழலில் இவ்வழக்கின் அமர்வு இன்று வந்தது. அப்போது சட்டத் திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.