அமாவாசையில் மறக்காமல் இந்த யாகத்தில கலந்துக்கோங்க… பகை விலகி ஓடும்..!

புன்னகை மன்னன் படத்தில் கால காலமாக வாழும் என்ற பாடலில் பகையே பகையே விலகு விலகு ஓடு…. என்று வரிகள் வரும். அதன்படி, பகை இல்லாத மனிதன் என்று ஒருவரும் இருக்க முடியாது. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் யாராவது ஒரு பகைவன் இருப்பான். கொஞ்சம் அலசி ஆராய்ந்து பார்த்தால் பகை கூட நமக்கு நல்லதுதான் என்று தோன்றுகிறது. நம் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான காரணமாகவும், ஒரு உந்துசக்தியாகவும் விளங்குபவர்கள் அவர்கள் தான்.

நாம் தடைகளைத் தாண்டிச் செல்ல ஒரு வெறியைத் தந்து சக்தியை அளிப்பவர்கள் அவர்கள் தான். ஆனால் பகையே கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அவர்களுக்கு ஒரு சந்தோஷம் தரும் தகவல் தான் இது. தொடர்ந்து பார்க்கலாமா…

தல வரலாறு

பஞ்சபாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று நாட்டை இழந்து சோகம் தாங்க முடியாமல் பல அவமானங்களை சந்தித்து வந்தனர். அப்போது வேதனையுடன் ஒரு காட்டில் அலைந்து திரிந்தனர். அங்கு தான் அவர்களுக்குப் பயம் வந்தது. விலங்குகளால் தமக்கு தீங்கு வந்து விடுவோமா…. இறந்து போவோமோ?

நாட்டைக் காப்பாற்ற முடியாமல் போகுமோ என பயந்து வந்தனர். அது போதாது என்று எதிரிகளால் தமக்கு ஆபத்து வருமோ எனவும் அஞ்சினர். நல்ல உணவு கிடையாது. நல்ல உறக்கமும் இல்லை. அதனால் நோய் தாக்கி அவல நிலைக்குத் தள்ளப்படுவோமோ என்றும் பயந்து நடுங்கினர்.

அப்போது அந்த ஐவருக்கும் பிரத்தியங்கரா தேவியைத் தரிசித்தால் நல்லது நடக்கும் என்று சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.

Prathiyankara devi
Prathiyankara devi

அதன்படி பிரத்தியங்கரா தேவியைத் தேடி வந்தனர். அங்கு தேவி சுயம்புவாகக் காட்சி அளித்தாள். இதைக் கண்டு அகமகிழ்ந்து ஐவரும் தேவியை அர்ச்சிக்கப் பூக்களைத் தேடினர். என்ன சோதனை? ஒரு பூ கூட கிடைக்கவில்லை. சித்திரை மாதத்தில் எப்படி பூக்கள் கிடைக்கும்? உடனே எதிரில் ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதன் இலையையே பூக்களாகக் கொண்டு தேவியை அர்ச்சித்து வழிபட்டனர்.

தொடர்ந்து வந்த பூஜையின் வெற்றி அவர்களுக்கு பகைவரையும் வெல்ல வழிவகுத்தது. இழந்த தேசத்தை மீட்டனர். நாடெங்கிலும் மகிழ்ச்சி ஏற்பட்டது.

ஐவர் பூஜித்த இந்த தலத்திற்கு ஐவர் பாடி என்ற பெயர் வந்தது. அதன் பின் அந்தப் பெயர் காலப்போக்கில் மருவி அய்யாவாடி ஆனது.

அமாவாசை யாகம்

இந்தக் கோவிலில் அமாவாசை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை யாகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் பகை விலகி ஓடும் என்பது ஐதீகம். இந்த யாகத்தில் சிவப்பு மிளகாய் போட்டு எதிரிகள் அழியட்டும் என பக்தர்கள் வேண்டிக் கொள்வர்.

Prathiyankara devi 1
Prathiyankara devi

உக்கிரமாக உள்ள இந்த தெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது என்றும் சொல்வார்கள். ராவணனின் மகன் இந்திரஜித் பிரத்தியங்கரா தேவிக்கு நிக்கும்பலா யாகம் செய்வார். அதன்படி யாகம் செய்தால் எப்பேர்ப்பட்ட வல்லமை கொண்டவரையும் ஜெயித்துவிடலாமாம். அதை உணர்ந்து கொண்ட அனுமான் இந்திரஜித் யாகம் செய்யாதபடி தடுத்து விடுவார். இப்படியும் ஒரு வரலாறு பிரத்தியங்கரா தேவிக்கு உண்டு.

எப்படி செல்வது?

கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகில் அதாவது தெற்கே 2 கிலோ மீட்டர் தொலைவில் அய்யாவாடி உள்ளது. இங்கு தான் பிரத்தியங்கரா தேவி கோவில் உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews