
Tamil Nadu
மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்; தப்பிக்குமா தமிழகம்..?
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பல மாநிலங்களில் மத்திய அரசு வழங்கும் நிலக்கரி பற்றாக்குறையினால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினத்திலும் நிலக்கரி பற்றாக்குறையினால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 840 மெகா வாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மின் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இவற்றில் முழுவீச்சில் மின் உற்பத்தி மேற்கொள்ள நாளொன்றுக்கு 9 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுவதால் அங்கு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சுமார் 80 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், தற்போது 3- வது யூனிட்டில் மட்டும் சுமார் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதாக அனல் மின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் மின்தடை ஏற்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
