சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம் என்றும் மின்வெட்டு ஏற்படுவதற்கு அரசின் தவறான முடிவுகள் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதனிடையே கோடைக் காலம் வரும்போது மின்சார தேவையும் அதிகரிக்கும். அதற்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இருப்பு வைத்திருப்போம் என கூறினார்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தொடர் மின்வெட்டு இல்லாத தமிழகம் என்ற நிலையினை வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். தற்போது நிர்வாக திறமை இல்லாத அரசாங்கம் ஆட்சி நடத்துவதால் மக்களுக்கு முழுமையான மின்சாரம் வழங்கப்படவில்லை என கூறினார்.
இதன் எதிரொலியாக தமிழகத்திற்கு வரும் தொழிற்சாலைகள் எல்லாம் மற்ற மாநிலங்களுக்கு சென்றதால் பொருளாதரம் பின்தங்கியதாக கூறினார். ஒரு நாட்டின் வளர்ச்சி மின் உற்பத்தி பொறுத்துதான் இருக்கிறது.
மேலும், மின்வெட்டால் மாணவர்களின் பொதுத்தேர்வு பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் விவசாயிகளின், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக கூறினார்.