
Tamil Nadu
பிரியாணி பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்!! ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைப்பு ..
சர்ச்சை எழுந்த நிலையில் ஆம்பூரில் நாளை தொடங்க இருக்கும் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.
மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுப்பு என்ற சர்ச்சை எழுந்து இருந்த நிலையில் மழை காரணமாக பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனிடையே 13,14 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் ஆம்பூரில் நாளை 15 ஆம் தேதி பிரியாணி திருவிழா நடைபெற இருந்தது. இதில் கோழி ,ஆட்டிறைச்சி பிரியாணிக்கு மட்டுமே அனுமதிப்பதாகவும் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பட்டியலின மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் திருவிழா நடைபெறும் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்காவிட்டால் அதனை இலவசமாக வழங்குவோம் என அந்த அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
