விஜய்யின் படங்கள் ரிலீஸாகும் போதெல்லாம் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படை எடுக்கிறார்கள். அவருடைய படங்கள் அனைத்து வயதினரையும் ஈர்ப்பதற்கான கலகலப்பான அம்சங்களை உள்ளடக்கியிருக்கும் என்னும் மக்களின் நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.அந்த நம்பிக்கையை முதலில் விதைத்தது 1996-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் தான்.
நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில், சங்கீதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் அஞ்சு அரவிந்த், சார்லி, எம்.என்.நம்பியார், நாகேஷ், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் மட்டும் சிறப்பு விருந்தினராக வந்து செல்வார். இத்திரைப்படம் விஜயின் திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படமாகவும் மற்றும் அவரது சினிமாவில் திருப்புமுனை படமாகவும் அமைந்தது.
இப்படம் 1997 ல் ”சுபாகண்க்ஷலு” என்று தெலுங்கிலும், 1997 ல் ” ஈ ஹ்ருதய நனிககி ” என்று கன்னடத்திலும் , 2002 ல் ” பதாய் ஹோ பதாய் ” என்று ஹிந்தியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. 250 நாட்கள் நிறைவு செய்து இப்படம் வெள்ளி விழாவைக் நடத்தியது.
இப்படத்தில் வரும் “ஆனந்தம் ஆனந்தம் பாடும்” என்ற பாடல் இன்றளவும் ரசிகர்களின் பிடித்தமான பாடலாக பேசபட்டு வருகிறது. பூவே உனக்காக படத்தை போலவே இந்த பாடலும் மெகா ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் சிறந்த 10 படங்கள் என பட்டியலிட்டாலும் அதில் பூவே உனக்காக படத்திற்கு நிச்சயம் ஓர் இடம் இருக்கும். சிறந்த 5 படங்கள் என சுருக்கினாலும், அதிலும் பூவே உனக்காக கட்டாயம் இடம் பிடிக்கும்.
நடிகர் விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால் இப்போது பார்த்தாலும் சலிக்காத உணர்வை உணர முடியும்.
தளபதி விஜய் அவருடைய திரையுலக வாழ்க்கையில் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.இந்நிலையில் இப்படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது .அதன்படி பூவே உனக்காக திரைப்படம் ரூபாய் 9.3 கோடி வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.