தைப்பொங்கலும் வந்தது… பாலும் பொங்குது….! பொங்கல் வைக்க நல்ல நேரம் எதுன்னு தெரியுமா?

பொங்கல் என்றாலே நமக்கு ஒரு மாதம் முன்னதாகவே அதற்கான ஆயத்த வேலைகள் துவங்கி விடும். வீடுகளை சுத்தம் செய்து வெள்ளை அடித்தும், வர்ணம் பூசியும் அலங்காரம் செய்வர். அந்தக்காலத்தில் வாழ்த்து அட்டைகள் பிரபலமாக இருந்தன. வாழ்த்து அட்டைகளை ஒருவருக்கொருவர் அனுப்பி தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வர்.

அதில் அப்படி ஒரு அலாதி இன்பம் இருக்கும். 80, 90களின் கிட்ஸ்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். வீடுகளின் வாசல்களில் காவி பட்டை அடித்து தெருவெங்கும் ஜெகஜோதியாக இருக்கும். இந்தப் பண்டிகையைப் பொறுத்த மட்டில் மக்களின் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தட்டி எழுப்பும் பண்டிகை என்றால் மிகையாகாது.

Happy pongal
Happy pongal

அதே போல் மார்கழி மாதம் முழுவதும் காலையில் எழுந்து கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்கி விட்டு வரும்போது புத்துணர்வு எழும். மார்கழி மாத கடைசியில் தான் போகிப்பண்டிகை வருகிறது. அதன் மறுநாள் தை பிறந்ததும் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப மக்கள் உற்சாகமாக தை மகளை வரவேற்று தைப்பொங்கலைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

தமிழர்களின் திருநாள் என்று சொல்லக்கூடிய பண்டிகை தைப்பொங்கல். வேளாண்மைக்கு முக்கியத்துவம் தருகிறது. விவசாயிகளுக்கும், விவசாயப் பொருள்களுக்கும் இந்தப் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழக மக்கள் அனைவரும் குதூகலமாகக் கொண்டாடி வரும் பண்டிகை.

அந்த வகையில் இந்த ஆண்டு வரும் ஜனவரி 15ம் தேதி தைப்பொங்கல் வருகிறது. அதற்கு முந்தைய நாளான 14ம் தேதி போகிப் பண்டிகை வருகிறது. பழையனவற்றைக் கழித்து அதை தீயிலிட்டு எரித்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவர். ஜன.16ல் மாட்டுப் பொங்கலும், ஜன.17ல் காணும் பொங்கலும் வருகிறது. உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் இந்தப் பண்டிகையை உற்சாகமாக் கொண்டாடி மகிழ்வார்கள்.

இப்போது பொங்கல் கொண்டாடும் விதம் பற்றியும் பொங்கல் வைக்க உகந்த நேரம் குறித்துப் பார்க்கலாம்.

தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடும் இந்தப் பண்டிகையை அறுவடைத்திருநாள் என்றும் சொல்வார்கள். அறுவடைக்குப் பிறகு புதிதாக விளைந்த நெல் மணியில் இருந்து கிடைத்த பச்சரிசியைக் கொண்டு பொங்கல் வைப்பார்கள். இதை சூரியபகவானுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். சூரியன், மாடு, இயற்கை விவசாயத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன. இவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.

மார்கழியின் கடைசி நாள் தான் போகிப்பண்டிகை. இதை இந்திரவிழா என்றும் சொல்வர். பழையனவற்றைக் கழித்து விட்டு புதியவனவற்றைக் கொள் என்பதே இதன் நோக்கம். அடுத்த நாள் வருவது தைப்பொங்கல்.

வீட்டுவாசலில் சூரியபகவானுக்கு காய்கறிகள் எல்லாம் படையலிட்டு பொங்கல் வைத்துக் கொண்டாடப்படுகிறது. மாட்டுத்தொழுவத்திலும் 3ம் நாள் அன்று மாட்டுப் பொங்கல் வைத்து அதாவது வீட்டில் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பர்.

Pongal 1
Pongal 1

சூரியன் தனுசு ராசியில் பயணத்தை முடித்து, மகர ராசிக்கு வரத் துவங்குகிறது. இதையே நாம் தை மாதப் பிறப்பு என்கிறோம். பிற மாநிலத்தவர்கள் மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

பொங்கல் வைக்க உகந்த நேரம் 2023

ஜன.15ல் தைப்பொங்கல் அன்று நல்ல நேரம் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை. மாலை 3.30 மணி முதல் 4.30 மணி வரை. இந்த நாளில் கௌரி நல்ல நேரம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும், எமகண்டம் நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரையும், ராகு காலம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும் உள்ளது.

தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை உள்ளது. மறுநாள் ஜன.16ல் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையும் உள்ளது.

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.