இன்றைய தினம் அதிமுக கட்சி பிளவுப்பட்ட தினமாக விமர்சகர்கள் கூறிக்கொண்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அதிமுக கட்சியில் இன்றைய தினம் கலவரம் நிகழ்ந்தது. அதிலும் குறிப்பாக அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் மாறி மாறி தாக்கினர்.
இதில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்தது. இந்த நிலையில் அதிமுக அலுவலகம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு தரப்பட்டதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அவர்களோடு மட்டுமே இல்லாமல் அதிமுக அலுவலகத்திற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த கலவரத்தில் விளைவாக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் பாலச்சந்திரன், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
14 பேர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளனர்.