#Breaking கோவையில் போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு; தப்ப முயன்ற கொலை குற்றவாளி துணிகரம்!

கோவையில் போலீசாரை நோக்கி கொலை குற்றவாளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் ரியல் எஸ்டேட் நிறுவன ஊழியரும், இந்து முன்னணி பிரமுகருமான சத்தியபாண்டி துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், முக்கிய குற்றவாளியான சஞ்சய் ராஜா என்ற நபர் சரணடைந்தார். இவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் சஞ்சய் ராஜா துப்பாக்கி பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சஞ்சய் ராஜா தான் மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை போலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறி அந்த இடத்திற்கு அழைத்துச்சென்றுள்ளார். அங்கு சென்றதும் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்.

இதனையடுத்து தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் சஞ்சய் ராஜாவை காலில் சுட்டு பிடித்தனர். தற்போது சஞ்சய் ராஜா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கொலை குற்றவாளி போலீசாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.