#BREAKING பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காலமானார்!

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்பு காலமானதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இரு தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள யுஎன் மேத்தா இருதயவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை நேற்று மதியம் பிரதமர் மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் இணைந்து சென்று சந்தித்தார். தாயின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் மோடி கேட்டறிந்த நிலையில், அவர் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென், தனது 100வது வயதில் மரணமடைந்தார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ள பிரதமர் மோடி, “ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது” என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

பிரதமரின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.