நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தை பார்வையிட பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்குச் செல்ல உள்ளார்.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 300 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் காயம் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடுப்படைகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதிக்கு செல்ல உள்ளார். முதலில் ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிடும் பிரதமர், பின்னர் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் இருந்து 250 கிமீ தெற்கிலும், புவனேஸ்வரில் இருந்து 170 கிமீ வடக்கிலும், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையத்தை கடந்து பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
அப்போது தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன.
இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ1, ஏ2 பெட்டிகளும் மற்றும் பி2 முதல் பி9 பெட்டிகளும் பலத்த சேதம் அடைந்தன. இதே போன்று, பெங்களூரு – ஹவுரா ரயிலில் 4 பெட்டிகளும் தடம்புரண்டதாக தெரிகிறது. ரயில்களின் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பெருத்த சேதம் அடைந்தன. இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஆக அதிகரித்துள்ளது. 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.