முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். எல்லா கிருத்திகை நாட்களிலும் விரதமிருக்க முடியாதவர்கள், ஆடி, கார்த்திகை, தை மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருப்பது வழக்கம்.
முதற்கடவுளாய் வினாயகர் இருந்தாலும் நம் தமிழ் மண்ணுக்குண்டான கடவுளாய் முருகன் இருக்கிறார். முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். நாளைய தினம்(3-2-2020) தை மாதத்தில் வரும் கிருத்திகையாகும். இந்த தைக்கிருத்திகையில் முருகன் அருள்பாலிக்கும் தலங்களில் மக்கள் தங்களின் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்துவது வழக்கம்.
இந்நாளில் முருகன் அபிஷேகத்திற்குரிய பால், தயிர், விபூதி, பன்னீர் போன்றவற்றை அளித்து சிறப்பான பலனை பெறலாம்.
தை கிருத்திகையின் மகிமைகள் :
பிள்ளைச் செல்வம் வேண்டுபவர்கள், தைக்கிருத்திகையில் முருகனை மனமார நினைத்து ஓராண்டு விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டு, கட்டாயம் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஜோதிட சாஸ்திர விதிகளின்படி முருகப்பெருமான் செவ்வாயின் அம்சம் என்பதால், செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, மனை, சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள்,
உள்ளவர்கள் இந்த தைக்கிருத்திகை தினத்தில் கார்த்திகேயனை வணங்கினால் வந்த வினையும், வருகின்ற வினைகளும் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்.
கிருத்திகை விரதத்துக்கு முதல் நாளான பரணி நட்சத்திர நாளின் இரவன்று கொஞ்சமாக சைவ உணவு உண்டு விரதம் தொடங்க வேண்டும். மறுநாள் கார்த்திகை அன்று அதிகாலை நீராடி, கந்தபுராணம் , கந்தர் சஷ்டி, ஸ்கந்த குரு கவசம் மாதிர்யான நூல்களை மனமுருகி படித்து, உப்பில்லாமல் உண்டு, பகலில் உறங்காமல் நோன்பிருந்து முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும். அடுத்த நாள் அதிகாலை ரோகிணி நட்சத்திரத்தில் முருகப் பெருமானை எண்ணி வழிபட்டு விரதம் முடிக்கலாம். மூன்று நாள்களும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், குறைந்தது கிருத்திகை நாளிலாவது விரதமிருப்பது நல்லது.
முருகனை இத்தைக்கிருத்திகை நன்னாளில் வணங்கி நற்பலன்களை பெறுவோம்.