மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை இதுவரை 1000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி 1500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்ட தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் நடமாடும் மறுவாழ்வு சிகிச்சை வாகனங்களையும் கொடுத்தார். மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய நவீன உபகரணங்கள் கண்காட்சியையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பேசியபோது, ‘மாற்றுத்திறனாளிகள்’ என்ற பெயரை கொடுத்து அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது கலைஞர் கருணாநிதிதான் என்று ஊனமுற்றோர் என்று சொல்லக் கூடாது என்பதற்காகவே மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை அவர் உருவாக்கினார் என்றும் கூறினார்.
மேலும் மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை 1,000 ரூபாயில் இருந்து 1500 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஓய்வூதியம் பெற்று வரும் கண் பார்வையற்றவர்கள் உள்பட அனைத்து மாற்றுத்திறனாளிகளும் 1500 ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.