பேட் கம்மின்ஸ்க்கு மட்டுமே இந்த சீசனில் கிடைத்த பெருமை.. ஜஸ்ட் மிஸ்ஸில் தவறவிட்ட ருத்துராஜ்..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த ஆண்டு பல தொடர்களில் தலைமை தாங்கி இருந்த பேட் கம்மின்ஸ், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பை என இரண்டையும் வென்று சாதனை புரிந்திருந்தார். மேலும் ஐசிசி கோப்பை உள்ளிட்ட பல முக்கியமான தொடர்களை கைப்பற்றி இருந்ததுடன் மட்டுமில்லாமல் நம்பர் ஒன் அணியாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

மேலும் சமீப காலத்தில் ஆஸ்திரேலியா கண்ட மிகச்சிறந்த கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்து வரும் நிலையில் தான் அவர் ஐபிஎல் தொடரில் 20 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவின் சிறந்த கேப்டனாக வலம் வந்த பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புதிய கேப்டனாகவும் நியமித்திருந்தது.

முன்னதாக ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்ரம் இருந்து வந்த நிலையில் கடந்த சில சீசன்களாக அந்த அணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு கம்மின்ஸின் கேப்டன்சி கை கொடுத்தது போல ஹைதராபாத் அணிக்கும் அவரது தலைமை கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் அந்த அணி நிர்வாகம் கம்மின்சுக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்திருந்தது.

அது எந்த விதத்திலும் வீண் போகாமல் இருந்ததுடன் மட்டுமில்லாமல் தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து குவாலிஃபயர் 1 போட்டியில் ஆடவும் தகுதி பெற்றுள்ளனர். மே 21 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதால் ஹைதராபாத் அணி நிச்சயம் வழக்கம்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் தெரிகிறது.

இந்நிலையில் இந்த சீசனில் சில கேப்டன்கள் தவறவிட்ட விஷயத்தை ஒரே ஆளாக தொட்டுப் பிடித்த பேட் கம்மின்ஸை பற்றி தற்போது பார்க்கலாம். இந்த சீசனுக்கு முன்பாக சில அணிகளின் கேப்டன்கள் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் சிஎஸ்கேவின் கேப்டனாக ருத்துராஜூம், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், ஹைதராபாத் அனியின் கேப்டனாக பேட் கம்மின்ஸும் புதிதாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

அப்படி இருக்கையில் இந்த நான்கு புதிய கேப்டன்கள் தலைமையில் இயங்கிய அணிகளில் ஒன்று மட்டும்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா, கில் மற்றும் ருத்துராஜ் தலைமையில் ஆடிய அனைத்து அணிகளும் லீக் சுற்றுடன் வெளியேறினர். இதில் ருத்துராஜ் நூலிழையில் முன்னேறும் வாய்ப்பை தனது முதல் கேப்டன்சியிலேயே தவறவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...