ஓலா டாக்சி புக் செய்து கஞ்சா கடத்திய 3 பேரை பண்ருட்டி போலிசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல்துறையினர் சென்னை சாலை பூங்குணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு சுமார் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையத்து கஞ்சா பொட்டலங்கள் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட திருச்சி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த மாதவன்(22), நதிஷ் (31) மற்றும் கார் ஓட்டுநர் அண்ணாதுரை (57) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மாதவன் நதிஷ் இருவரும் தொடர்ந்து ஓலா டாக்சி புக் செய்து மருந்து பார்சல் எடுத்து செல்ல வேண்டும் என கூறி சென்னையிலிருந்து சட்ட விரோதமாக கஞ்சா கடத்திச் சென்று திருச்சி மற்றும் கும்பகோணம் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும்18 கிலோ கஞ்சா ஆகியவைகளை பறிமுதல் செய்து மாதவன் நத்தீஷ் ஆகிய இருவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் மேலும் கார் ஓட்டுநர் அண்ணாதுரையிடும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.