இன்று காலை தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டமானது, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா பற்றி ஆலோசிப்பதற்காக நடைபெற்றது. இதில் பாஜக, அதிமுக கட்சிகள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்தனர்.
அதிமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்தாலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்போம் என்று கூறியுள்ளார். அதன்படி நீட் விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முழு ஆதரவு தரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார். நீட் தேர்வு ரத்து குறித்து ஏற்கனவே தமிழ்நாடு சட்டப்பேரவையிலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதிமுக நிலைப்பாட்டை தெரிவித்து விட்டோம் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பிரதிநிதிகள் பங்கேற்காத நிலையில் தமிழக முதலமைச்சருக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது.