ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கருப்பசாமிக்கு கறி விருந்து படைத்து ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர்.
சிவகங்கை அருகே உள்ளது திருமலை கிராமம். இந்த ஊரில் கன்மாயில் உள்ள காவல் தெய்வம் மடை கருப்பு சாமிக்கு ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும்.
இத்திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது தான் இதன் தனிச்சிறப்பு. அதன்படி இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் கருப்புசாமிக்கு 500 ஆடுகளை பலிகொடுத்து ஆட்டுத்தலைகளை கருப்பு சாமிக்கு பக்தர்கள் படையலிட்டனர்.
பிறகு பிரம்மாண்ட பாத்திரத்தில் அதிகாலையில் சாமிக்கு சிறப்பு பூஜை செய்த பிறகு அசைவ உணவு பறிமாறப்பட்டது. திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் அசைவ உணவை ஆர்வத்துடன் உண்டு மகிழ்ந்தனர்.
கறி விருந்தில் பங்கேற்ற பக்தர்கள் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்க மாட்டார்கள். அந்த இலை காய்ந்த பிறகே கிராம பெண்கள் ஊருக்குள் வர வேண்டும் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டு வருகிறது. கருப்பசாமிக்கு படையலிட்டு வேண்டுதல் நிறைவேற்றினால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.