ஒமிக்ரான் பரவல்… மக்கள் கூட்டம் கூடாதீர் : முதலமைச்சர் வேண்டுகோள்

ஓமிக்ரான் தொற்றானது தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் பரவலை தவிர்க்க பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் ஆன ஓமிக்ரான் வைரஸ் பரவலை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை துரிதப்படுத்தும் வகையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அரசுத்துறை செயலாளர்கள், அரசு துறை உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மருத்துவ வல்லுனர்கள், எதிர்வரும் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்த்தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சில வழிமுறைகளை கடைபிடிக்க அன்புடன் வலியுறுத்தி கேட்பதாக முதல்வர் கூறியுள்ளார்.

அதன்படி பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும்,  சமூக இடைவெளி அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment