விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு; எடப்பாடிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி!

நாங்கள் மக்களை நாடி செல்ல இருக்கின்றோம்; மக்கள் மன்றத்தில் நீதி கேட்க இருக்கிறோம என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க.பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியிருக்கக்கூடிய நிலையில் இது குறித்து தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவருடைய இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், நாங்கள் அடுத்ததாக மக்களை நாடி நீதி கேட்போம். மக்கள் மன்றத்தில் உரிய நீதி கேட்போம். புரட்சித்தலைவி அம்மா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.வகுத்த சட்ட விதியைத்தான் நாங்கள் காப்பாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம். அவர்தான் கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர். அதை ரத்து செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

அ.தி.மு.க. பழனிச்சாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சி அல்ல இது. மக்கள் மன்றத்தை நாட எங்கள் படை புறப்பட்டு விட்டது. இந்த தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. இந்த தீர்ப்பு மூலம் எங்கள் தொண்டர்கள் மேலும் எழுச்சி அடைந்துள்ளனர்.

எடப்பாடி அணிதான் தி‌.மு.க.வின் A to Z டீம். விரைவில் சசிகலா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளோம். நாங்கள் திமுக பி டீம் என்றால் எடப்பாடி பழனிச்சாமி மீதான கோடநாடு வழக்கு என்ன ஆச்சு. ஆணவத்தின் உச்சநிலையில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் பேசுகையில், பொதுக்குழு விவகாரத்தில் மேல் முறையீடு என்பது இல்லை. தீர்ப்பில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று எந்த பகுதியிலும் இல்லை. பொதுக்குழு செல்லும் என்பதை தவிர ஒரு அடிக்கூட முன்னேரவில்லை. இந்த தீர்ப்பு அவரை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.