கூட்டணி கவுன்சிலர் பெயரை யாரும் சொல்லல; நான் போட்டியிட்டேன்! இருந்தாலும் முதல்வர் உத்தரவு-ராஜினாமா கொடுத்த கவுன்சிலர்!
மார்ச் 4ஆம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு எதிராகவே திமுகவின் போட்டி வேட்பாளர்கள் களத்தில் இறங்கி வெற்றி பெற்றனர். இதனால் அன்று மாலையே தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராஜினாமா செய்யாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவர் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதனால் வரிசையாக தலைவர், துணைத் தலைவர் பதவிகளை ராஜினாமா செய்து வந்தனர். இந்த நிலையில் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திமுகவின் தமிழ்செல்வன். ராஜினாமா கடிதத்தை பேரூராட்சி செயல் அலுவலர் இடமளித்தார் தமிழ்ச்செல்வன்.
அதேபோல் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி, முதலமைச்சர் உத்தரவை அடுத்து பதவியை ராஜினாமா செய்தார்.
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு பேரூராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரான கலாராணி பெயரை பேரூராட்சி தலைவர் பதவிக்கு முன்மொழிய யாரும் முன் வரவில்லை.
கலாராணி போட்டியிடாத நிலையில் திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய கம்யூனிஸ்டு ஒதுக்கிய பதவியில் அமர்ந்த திமுகவினரை பதவி விலக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து புவனேஸ்வரி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.
