இனி ஒரே நேரத்தில் 2 டிகிரி;; வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன தெரியுமா?
மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 படிப்புகளை முழுநேரமாக படிக்க பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ள பேரில் இனி ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை முழுநேரமாக படிப்பது சாத்தியமாகவுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 இளங்கலை அல்லது 2 முதுகலைப் படிப்புகளை தொடரலாம்.
இதோடு பட்டப்படிப்புடன் பட்டயப்படிப்பையும் சேர்த்து படிக்க முடியும். 2 பட்டப்படிப்புகளை வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கலாம். ஒரு மாணவர் ஒரே நேரத்தில் 2 முழுநேர கல்வியினை தொடரலாம் என்றாலும் இரண்டு வகுப்புகளும் ஒத்துப்போவது கடினம்.
இந்த பிரச்சனையை தவிர்க்கவே ஒரு படிப்பை முழு நேரமாகவும் மற்றொரு படிப்பை ஆன்லைன் அல்லது தொலைதூர முறையிலும் படிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் அல்லது தொலைதூர முறையில் பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பை தொடரும் போது அது சட்டப்பூர்வ கவுன்சில் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பல்கலைகழகங்கள் தங்களின் சட்டப்பூர்வ அமைப்புகள் மூலம் வழிமுறைகளை உருவாக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் பலதரப்பட்ட கல்விகளை பயிலும் வாய்ப்பு உருவாக்கப்பட்டாலும் இத்திட்டத்தின் மூலம் தங்களின் பாதக அம்சங்களை அரசு உற்றுநோக்காதது ஏன் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதோடு கல்வி கட்டணங்கள் உள்ளிட்ட பல விவரங்கள் இன்னும் முழுமையாக அறிவிக்கப்படாதது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
