இரண்டு நாட்களுக்கு டீசல் இல்லை! தொலைபேசி சேவை முடங்கும் அபாயம்!!
நாளுக்கு நாள் இலங்கை நாட்டில் அத்தியாவசிய தேவை பொருட்களின் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் மக்கள் கடல் வழியாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தஞ்சம் புக முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது அதிர்ச்சிகரமான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு நாள் இலங்கையில் டீசல் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு டீசல் விற்பனை செய்யப்பட மாட்டாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கையிருப்பு குறைந்து வருவதாலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே டீசல் இருப்பதாலும் விற்பனை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 37 ஆயிரத்து 500 மெட்ரிக் டன் டீசலை தரையிறங்க முடியாத நிலை இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு டீசல் விற்பனை நிறுத்தப்பட்டாலும் பெட்ரோல் வினியோகம் தட்டுப்பாடின்றி தொடரும் என்றும் அறிவித்துள்ளது. இந்தநிலையில் இலங்கையில் தொலைபேசி சேவை முடங்கும் அபாயத்தில் உள்ளது.
இலங்கையில் நீண்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால் இணைய சேவை வழங்குவதிலும் சிக்கல் நிலவுகிறது. பற்றாக்குறை காரணமாக தொலைபேசி கோபுர ஜெனரேட்டர்கள் டீசல் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. இணையதள இணைப்புகள் செயல் இழக்கக்கூடும் இணையத்தில் தரவுகள் பரிமாறும் வேகம் குறையும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
