நம் நாட்டில் கடந்த சில தினங்களாகவே ஒமைக்ரானின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
அதில் குறிப்பாக உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அதன்படி கர்நாடக மாநிலத்தில் டிசம்பர் 28-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு 28ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதனால் கர்நாடகாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற தகவல் வெளியானது. கர்நாடகாவில் திரையரங்குகள், உணவகம், திருமண நிகழ்ச்சிகளுக்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளன.