அதிகாலையிலேயே களைகட்டிய வள்ளுவர் கோட்டம்: ரஜினி ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி கூறினார். அதேபோல் 2010ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் கட்சியை உறுதி செய்யப் போவதாகவும் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் திடீரென சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் கடந்த மூன்று வருடங்களாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த அவருடைய ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்
இதனையடுத்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ரஜினி ரசிகர்கள் கூடி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளனர். காவல்துறையினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ள நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நேற்று இரவு முதலே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து வேன்கள் மற்றும் பேருந்துகளில் இருந்து சென்னை வர தொடங்கிய ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே வள்ளுவர் கோட்டம் அருகே குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இது ஒரு பக்கா அரசியல் கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டம் போல் அனைத்து ஏற்பாடுகளும் மிக பிரமாதமாக செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக ரஜினிகாந்த் மனம்மாறி அரசியலுக்கு வருவாரா என்பது தெரியவில்லை என்றாலும் ரசிகர்கள் தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக இந்த ஆர்ப்பாட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது