மின்சாரத்தை காணவில்லை: காவல்நிலையத்தில் புகார் அளித்த பெண்ணால் பரபரப்பு

 

திருப்பூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்த மின் இணைப்பை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் என்.ஜெயலட்சுமி என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விவரம் கேட்டுள்ளார். ஆனால் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என கூறியுள்ளனர்.

இதனையடுத்து அவர் இணையம் மூலமாக மின் இணைப்புக்கு ரூ.2,818 மட்டும் செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி அவரது வீட்டுக்கு இணைப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்திலிருந்து அவரது செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. 

தனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காமலேயே வழங்கிவிட்டதாக எஸ்.எம்.எஸ். வந்ததால் அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, மின் இணைப்பு கட்டண தொகை ரூ.10-ஐ இணையவழியில் செலுத்திவிட்டு அதன் ரசீதுடன், தனது வீட்டுக்கு அளிக்கப்பட்ட மின்சாரத்தை காணவில்லை என்று திருப்பூர் மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web