நிலவுக்கு டிக்கெட், ஆப்பிள் ஐபோன், 100 சவரன் தங்கநகை: சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் அறிக்கை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கடந்த சில நாட்களாக தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன என்பதும் அதில் பல சலுகை அறிவிப்புகள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளன என்பதும் தெரிந்தது
இந்த நிலையில் அரசியல் கட்சிகளை மிஞ்சும் வகையில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தெற்கு தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் துலாம் சரவணன் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் ஆப்பிள் ஐபோன், ஒவ்வொரு வாக்காளர்களின் வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய், பெண்களுக்கு 100 சவரன் தங்க நகை என தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
அவரது தேர்தல் அறிக்கையில் இருப்பதாவது: மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும், மக்கள் அனைவருக்கும் நீச்சல்குளம் வசதியுடன் மூன்று மாடி வீடு கட்டித்தரப்படும், வீடு ஒன்றில் வருடம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும், அனைத்து வீட்டுக்கும் 20 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்படும், ஒவ்வொரு வீட்டுக்கும் சிறிய வகை ஹெலிகாப்டர் வழங்கப்படும், இல்லத்தரசி வேலை செய்ய ரோபோ வழங்கப்படும், பெண்களின் திருமணத்திற்கு 100 பவுன் தங்க நகைகள் வழங்கப்படும், இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ஒரு ரூபாய் ஒரு கோடி வழங்கப்படும், மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும், கால்வாய்கள் வெட்டி வீட்டுக்கு ஒரு படகு வழங்கப்படும், 100 நாட்கள் பயணமாக நிலவுக்கு அழைத்துச் செல்லப்படும், தொகுதி ஜில்லென்று இருக்க 300 அடி செயற்கை பனிமலை உருவாக்கப்படும், தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும், தொகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படும், என்று கூறியுள்ளார்
இவ்வளவு வாக்குறுதிகள் கூறியுள்ள இந்த வேட்பாளருக்கு குப்பைத்தொட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது