குற்றால அருவிகளில் குளிக்க தடை: என்ன காரணம்?

தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக வந்து கொண்டிருக்கின்றது. எனவே இந்த பொங்கல் விடுமுறையில் குற்றால அருவிகளில் கூட்டம் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிப்பதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் கனமழை காரணமாக தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம், மேக்கரை அடவிநயினார் அணை, செங்கோட்டை குண்டாறு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் பொதுமக்கள் செல்ல தடை என காவல்துறை அறிவிப்பு செய்துள்ளது.
இன்று முதல் ஜனவரி 17ஆம் தேதி வரை அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது. பொங்கல் விடுமுறையை குற்றாலத்தில் ஜாலியாக கழிக்கலாம் என்று நினைத்த சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் வியாபாரிகளுக்கும் இந்த உத்தரவு பெரும் அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அருவிகளில் உள்ள தண்ணீரை பார்ப்பதற்காக ஓரளவு கூட்டம் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது