ஆக்சிஜன் தேவையா? 104 எண்ணை அழையுங்கள் என தமிழக அரசு அறிவிப்பு!

 
ஆக்சிஜன் தேவையா? 104 எண்ணை அழையுங்கள் என தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் அவசர தேவைக்கு 104 என்ற எண்ணை அழைத்து ஆக்சிஜனை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது

கோவிட்‌-19 தொற்று பரவுதலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோவிட்‌-19 தொற்றால்‌ பாதிக்கப்படுவோர்‌ எண்ணிக்கை அதிகரிப்பதால்‌, மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்கள்‌ போன்ற கோவிட்‌-19 சிகிச்சை அளிக்கும்‌ இடங்களில்‌ மருத்துவ ஆக்ஸிஜனுக்கான தேவை உயருமென எதிர்பார்க்கப்படுகிறது. 

இம்மாநிலத்திலுள்ள ஆக்ஸிஜன்‌ உற்பத்தி செய்யும்‌ தொழிற்சாலைகள்‌ அதன்‌ உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆக்ஸிஜன்‌ கிடைப்பதை அதிகரிப்பதற்காக,
மருத்துவ ஆக்ஸிஜனை ஏற்றிச்‌ செல்லும்‌ டேங்கர்‌ லாரிகள்‌ விரைவாக மருத்துவ மனைகளை வந்தடைய தேவைப்படும்‌ இடங்களில்‌ காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அத்தகைய மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்களில்‌ ஏற்படும்‌ மருத்துவ ஆக்ஸிஜன்‌ வழங்கல்‌ தொடர்பான சிக்கல்களைத்‌ தீர்க்க, மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின்‌ கீழ்‌ 24 மணி நேரமும்‌ இயங்கும்‌ கால்‌ சென்டரை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. 
மருத்துவ ஆக்ஸிஜன்‌ பற்றாக்குறையினை எதிர்கொள்கிற தமிழ்நாட்டில்‌ உள்ள மருத்துவமனைகள்‌, நர்சிங்‌ ஹோம்கள்‌ உடனடியாக 104 என்ற எண்ணில்‌ உதவிக்கு அழைக்கலாம்‌.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

From around the web