இருள் விலகி உதயசூரியன் ஆண்டாக அமையும்: முக ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை தமிழகத்தில் உள்ள அனைவரும் கொண்டாட தயாராகி வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகி உதயசூரியன் ஆண்டாக இது அமையும் என்று கூறி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வாழ்த்து அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டைச் சூழ்ந்திருக்கும் இருள் விலகி உதயசூரியன் ஆண்டாக இது அமையும். பொங்கல் விழாவினை பண்பாட்டு மறுமலர்ச்சியாகக் கட்டமைத்த சிறப்பு திராவிட இயக்கத்துக்கு உண்டு. மதச் சடங்குகள் - மந்திரங்கள் இல்லை, அவரவர் தெய்வங்களுக்கு அவரவர் விருப்பப்படி படையலிட்டு - சூரியனை வணங்கி - மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொங்கல் நன்னாள் போல இன்னொரு விழாவைக் காண முடியாது.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டே தி.மு.க.,வினர் பொங்கல் விழாவைத் தமிழர் திருநாளாக - தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றனர். தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருவள்ளுவர் நாளும் இணைந்து கொண்டாடப்பட்டது; தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்கிற காலக் கணக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்புத் திட்டத்தைத் தொடங்கியவரும் தலைவர் கலைஞர்தான்.
ஜனவரி 13-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியிலும், 14-ஆம் தேதி ஆவடி தொகுதியிலும் நடைபெறும் சமத்துவப் பொங்கல் விழாக்களில் பங்கேற்கிறேன். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்!
இவ்வாறு முக ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.