மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை: அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்யப்படும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரத்திலும் கூறிவரும் நிலையில் 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கருணாநிதி மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கண்டுபிடிக்கப்படும் என முக ஸ்டாலின் ஒவ்வொரு பிரச்சாரம் மேடையிலும் கூறிவரும் நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜன்செல்லப்பா அம்மாவின் மரணம் குறித்து முக ஸ்டாலின் எது கூறினாலும் நாங்கள் தைரியமாக தான் உள்ளோம்
ஆனால் முக அழகிரி தெளிவாக வெளிப்படையாகவே ஒன்றை கூறியுள்ளார். கடந்த தேர்தலின்போது கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாததால் தேர்தலில் அவரை நிறுத்த வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவரை தேர்தலில் நிறுத்தினால் தான் வெற்றி பெறலாம் என்று ஸ்டாலின் தனது சுய லாபத்திற்காக நிறுத்தினார். எனவே கருணாநிதி மரணத்திற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று அவரே நேரடியாக கூறியுள்ளார்
இதனால் வரும் 2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கருணாநிதி மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்போம் என்று அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியுள்ளார். அதிமுக எம்எல்ஏவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது