கமல்ஹாசன் ஒரு அரைவேக்காடு: ‘மணல் கொள்ளை’ குறித்து சர்ச்சையாக பேசிய செந்தில் பாலாஜி ஆவேசம்

தேர்தல் பிரச்சாரத்தின் போது மணல் கொள்ளை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய செந்தில் பாலாஜியை மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக குற்றம் சாட்டிய நிலையில் கமல்ஹாசன் ஒரு அரைவேக்காடு என்றும் இந்த இதில் உள்ள பிரச்சனை என்னவென்றே புரியாத அவர் என்றும் கூறியுள்ளார் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்ததாவது:
கரூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி, காவிரி ஆற்றுப்படுகைகளிலிருந்து உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இது, சட்டத்துக்கு புறம்பானது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இயந்திரங்களை வைத்து, லாரி போன்ற கனரக வாகனங்களில் தான் மணல் அள்ளக்கூடாது என்பது தான் விதியாக உள்ளது. இந்த அடிப்படைகூட நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. கரூர் மாவட்டத்தில் சுமார் 15,000 மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ள முடியாததால், வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை செய்தால், அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை உள்ளது?. காரணம், இத்தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அது பாதிக்கப்படும் என்பதற்காகவே மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் தான், இந்த உத்தரவாதத்தை மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு அளிக்கும் வகையில், தி.மு.க தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன், மாட்டு வண்டியில் மணல் அள்ளத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருந்தேன். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், அரசு இதற்கு உத்தரவாதம் அளித்துள்ளது. கரூர் மாவட்ட காவிரி ஆற்றங்கரையில் ஐந்து இடங்களில் மாட்டு வண்டிகள் மூலம் உள்ளூர் தேவைகளுக்கு மணல் அள்ள இடம் தேர்வு செய்யப்படும் எனத் தெரிவித்தது. ஆனால், இன்றுவரை அதற்கான முறையான அரசு ஆணை வெளியிடப்படவில்லை. இப்படி வாழ்வாதாரத்துக்காக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதை தடுப்பவர்கள் தான், மணல் கொள்ளை அடிக்கும் ஆளுங்கட்சினருக்கு துணைபோகிறார்கள். அதனால், கொல்லைப்புறமாக நடைபெறும் மணல் கொள்ளைக்கு மட்டும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த விவரமெல்லாம் தெரியாமல் கமல்ஹாசன் அரைவேக்காடு போலப் பேசுகிறார்”
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.