போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்: 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்!

 

போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக குழந்தைகளுக்கு சானிடைசர் கொடுத்த ஊழியர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களில் சமீபத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என மாநில அரசுகள் அறிவுறுத்தியதை அடுத்து பலரும் ஆர்வத்துடன் முன்வந்து தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தனர்

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட குழந்தைகள் தவிர கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதிலாக தவறுதலாக சானிடைசர் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

polio drops

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள யாவத்மால் என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர் போலியோ சொட்டு மருந்தை எடுப்பதற்கு பதிலாக தவறுதலாக சானிடைசரை எடுத்து 12 குழந்தைகளுக்கு வழங்கியுள்ளார் 

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து போலியோ சொட்டு மருந்து மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளும் பரிசோதனை செய்யப்பட்டு எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் இந்த விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்த மூன்று ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

From around the web