காரும் இல்லை, கடனும் இல்லை: சொத்து மதிப்பை அறிவித்த பிரதமர் மோடி!

 

பெரிய பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் தங்களுடைய சொத்து மதிப்பை வெளியிட மாட்டார்கள். அப்படியே வெளியிட்டாலும் அது உண்மையாக இருக்குமா? என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் 

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சொத்து மதிப்பை வெளிப்படையாக அறிவித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிலவரப்படி தனது சொத்தின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் உயர்ந்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் 
மேலும் தனக்கு சொந்தமாக காரும் இல்லை கடனும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ 2.85 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனக்கு நான்கு தங்க மோதிரங்கள் இருப்பதாகவும் அவற்றின் எடை 45 கிராம் என்றும் அதன் மதிப்பு ரூபாய் 1.5  லட்சம் என்றும் தனது அசையும் சொத்துக்களின் மதிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனக்கு ரூ. 28.63 கோடி சொத்து இருப்பதாக அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு 32.3 கோடி சொத்து இருந்ததாகவும் இந்த ஆண்டு அந்த சொத்து மதிப்பு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனக்கு சொந்தமாக வீடு ஒன்று இருப்பதாகவும் அதன் மதிப்பு ரூ. 99.36 லட்சம் என்றும், இதுதவிர விவசாயம் அல்லாத நிலங்களின் மதிப்பு ரூ. 16.02 லட்சம் என்றும் தன்னிடம் சொந்தமாக கார் கூட இல்லை என்றும் ஒரே ஒரு இருசக்கர வாகனம் மட்டுமே உள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

பிரதமர் உள்பட அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

From around the web