நீட் தேர்வு முடிவுகள்: ஆடு மேய்ப்பவரின் மகன் முதலிடம், ஏகப்பட்ட குளறுபடிகள்

 

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளிவந்த நிலையில் இந்த தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் என்பவர் அகில இந்திய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை செய்துள்ளார். இவர் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நீட் தேர்வில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சோயிப் அஃப்டாப் என்ற மாணவர் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

நீட் தேர்வு முடிவுகளில் ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக திரிபுரா மாநிலத்தில்  3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில் 88,889 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளது. அதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியர்கள் 12,047 பேர்கள் என்றும் தேர்ச்சி பெற்றவர்கள் 37,301 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாணவர்களை பொருத்தவரை கடந்தாண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. கடந்தாண்டு நீட் தேர்வு தேர்ச்சி விகிதம் 48.57% ஆக இருந்த நிலையில் நடப்பாண்டு 57.44% ஆக அதிகரித்துள்ளது என்பது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

தமிழக மாணவர்களுக்கு அரசு ஏற்பாடு செய்துள்ள பயிற்சி மற்றும் பயிற்சி மையங்கள், மாணவர்களின் ஈடுபாடு ஆகியவைகளே நீட் தேர்வில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க காரணங்களாக கூறப்படுகிறது

From around the web