அதிக வட்டிக்கு கடன்: மூன்று செயலிகள் மீது அதிரடி நடவடிக்கை

ஆன்லைன் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்து கடன் பெற்றவர்களை துன்புறுத்தி வருவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் மூன்று செயலிகள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக வட்டிக்கு கடன் வழங்கியதாக மூன்று செயலிகள் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் அதிக வட்டிக்கு கடன் வழங்கியதோடு வட்டியுடன் அசலையும் தரும்படி துன்புறுத்தியதாக புகார் வந்தது. இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட மூன்று செயலிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு செயலிகள் மற்றும் டெல்லியை சேர்ந்த ஒரு செயலி ஆகிய மூன்று செயலிகளில் உள்ள நிர்வாகிகள் தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு கடன் கொடுத்து அதிக வட்டி பெற்றதோடு அவர்களுக்கு பயமுறுத்தியதாகவும் துன்புறுத்தியதாகவும் தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று செயலிகள் மூலம் அதிரடி நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிக வட்டிக்கு கடன் தரும் செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என ஏற்கனவே பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர். ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் அதிக வட்டிக்கு கடன் தருவதோடு மனதளவிலும் துன்புறுத்துவதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற போலியான செயலிகள் மூலம் கடன் பெற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது