இலவச ஆண்ட்ராய்டு செல்போன், 150 யூனிட் இலவச மின்சாரம்: அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்?

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன்கள் இலவசம் என்றும் இதுவரை 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் 150 யூனிட்டுகள் இலவசம் என்ற அறிவிப்பு உள்பட பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தேர்தல் கூட்டணிகள் மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக சமூகவலைதளங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் இலவசங்கள் மற்றும் சலுகை அறிவிப்புகள் குறித்த தகவல் வைரலாகி வருகிறது
இதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் இலவசம் என்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு எல்இடி டிவி அல்லது வாஷிங்மெஷின் இலவசம் என்றும் கூறப்படுகிறது
தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும் என்றும் வீடுகளுக்கு இலவச மின்சாரம் 150 யூனிட் ஆக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
மேலும் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ரூபாய் 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் 6 கிராம் தங்கம் திருமணத்திற்கு வழங்கப்படும் என்றும் அதே பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 60,000 ரூபாய் மற்றும் 10 கிராம் தங்கம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
சிலிண்டர்களுக்கு மாநில அரசு மானியம் வழங்கும் என்றும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்கப்படும் என்றும் அதிமுக தேர்தல் அறிக்கையில் இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது